இலங்கையின் புதிய "பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்" ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களை முன்னறிவிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கையின் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) குறித்த ஒரு வரைவை பொதுமக்களின் கருத்துக்காக வெளியிட்டுள்ளது. 1979 முதல் அமுலில் உள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக இந்த முன்மொழியப்பட்ட சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீதான பல தசாப்த கால தேசிய மற்றும் சர்வதேச விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச) அரசாங்கம் இந்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தை ஒரு 'ஜனநாயக சீர்திருத்தம்' போல் முன்வைக்கிறது.

இருப்பினும், புதிதாக முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை அப்படியே உள்ளடக்கியிருப்பதுடன் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பரந்த தாக்குதலாக அமைவதோடு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போருக்கான அடித்தளத்தை அமைக்கின்றது.

இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார [Photo: Facebook/Harshana Nanayakkara]

முன்மொழியப்பட்ட மசோதா மீதான அதிகரித்து வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அது ஒரு 'வரைவு' மட்டுமே என்றும், 'பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பிறகு திருத்தப்படும்' என்றும் கூறியுள்ளார். இது போன்ற உத்தரவாதங்கள் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டவை.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கம், 1979ல் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தமிழ்ப் போராளிக் குழுக்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது. 1983ல் தொடங்கிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால இனவாதப் போரின் போது, இந்தச் சட்டம் தீவு முழுவதும் உள்ள தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராகவும், 1988-1990ல் ஜே.வி.பி. தலைமையில் கிராமப்புற இளைஞர்களால் நடத்தப்பட்ட அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளை இரத்தக் களறியில் அடக்கவும், மற்றும் பரந்த அளவில் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் ஈவிரக்கமின்றி பயன்படுத்தப்பட்டது.

1994 முதல், இலங்கையின் முதலாளித்துவக் கட்சிகள், ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பைச் சுரண்டிக்கொள்வதற்கான ஒரு இழிந்த முயற்சியாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாகத் திரும்பத் திரும்ப வாக்குறுதி கொடுத்த போதிலும் அதிகாரத்திற்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகளைக் கைவிட்டு, இந்த சட்டத்தை இரக்கமின்றி தொடர்ந்து பயன்படுத்தின.

தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சிக்கு வந்தவுடன், 'பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்து செய்வதாகவும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாகவும்' உறுதியளித்தது (ஒரு செழிப்பான தேசம், ஒரு அழகான வாழ்க்கை, பக்கம் 129). சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை 'மறு பேச்சுவார்த்தை' நடத்தி சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது உட்பட அதன் ஏனைய எல்லா வாக்குறுதிகளையும் போலவே, இந்த வாக்குறுதியும் குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக மற்றும் ஏனைய ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர்கள், முன்நாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவை விமர்சித்தனர். இருப்பினும், பயங்கரவாதத்திருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் உள்ள பல பிரிவுகள் அந்த மசோதாவை மிகவும் ஒத்திருக்கின்றன.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் என்ற இந்தச் சட்டத்தின் பெயரே, இது முதலாளித்துவ அரசைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமானது வெகுஜனங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடக்க எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில் பரந்த மற்றும் தெளிவற்ற சொற்களில் பயங்கரவாதத்தை வரையறுக்கின்றது.

முன்வடிவ மசோதாவின் பிரிவு 3, 'பயங்கரவாத நிலையைத் தூண்டுதல்', 'பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவையோ அச்சுறுத்துதல்', அல்லது 'இலங்கை அரசாங்கத்தையோ, வேறு எந்த அரசாங்கத்தையோ, அல்லது ஒரு சர்வதேச அமைப்பையோ எந்தவொரு செயலைச் செய்யும்படி அல்லது செய்யாமல் இருக்குமாறு கட்டாயப்படுத்தும்' செயல்கள் என பயங்கரவாதச் செயல்களை வரையறுக்கிறது.

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், ஏகாதிபத்தியப் போர்கள், காசாவில் நடக்கும் இனப்படுகொலை ஆகியவற்றை எதிர்க்கும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைக் குற்றமாக்க, இதுபோன்ற விதிகள் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதை நிறுத்தக் கோருவதும் அல்லது அத்தியாவசிய சேவைகள் ஒழுங்குமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் 'பயங்கரவாதம்' என்று வகைப்படுத்தப்படலாம்.

ஒரு வெளிப்படையான ஏமாற்று வேலையாக, இந்த வரைவின் ஒரு துணைப்பிரிவு, போராட்டங்கள், கருத்து வேறுபாடுகள், வேலைநிறுத்தங்கள் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்பது 'மட்டும்' ஒரு பயங்கரவாத குற்றத்தை ஊகிக்கப் போதுமானதல்ல என்று கூறுகிறது. இது ஒரு மோசடியாகும். ஆளும் வர்க்கம் தனக்கு தேவை என்று கருதும் போதெல்லாம், அரசுக் கொள்கைகளை எதிர்க்கும் செயல்களை பயங்கரவாதமாக எதேச்சதிகராமாக சித்தரிக்க முடியும்.

பிரிவுகள் 9 மற்றும் 10 போன்றவை, பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் பேச்சு, வெளியீடுகள் மற்றும் பொருட்களை விநியோகிப்பது அல்லது வைத்திருப்பதை குற்றமாக்குகின்றன. அடுத்த பிரிவானது இணையம், மின்னணு ஊடகங்கள் மற்றும் ஏனைய அனைத்து பொதுப் பிரசுர வடிவங்களுக்கும் இந்த விதிகளை நீடிக்கிறது.

தேடுதல் நவடிக்கைகள் மற்றும் பறிமுதல் அதிகாரங்களும் பொலிசில் இருந்து ஆயுதப் படை உறுப்பினர்கள் மற்றும் கடலோரக் காவல் அதிகாரிகளுக்கும் நீடிக்கப்படுகின்றன. அவர்கள் தனிநபர்களை 24 மணி நேரம் வரை தடுத்து வைத்து, பின்னர் பொலிசிடம் ஒப்படைக்க அதிகாரம் பெற்றுள்ளனர். இது சட்ட அமுலாக்கத்தின் மேலும் ஒரு இராணுவமயமாக்கலைக் குறிக்கிறது.

'இரகசியத் தகவல்' தொடர்பான விசாரணைகளைக் குறிப்பிடும் மற்றொரு பிரிவு, 'தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் எந்தவொரு இரகசிய குறியீடு, வார்த்தை, கடவுச்சொல் அல்லது இரகசிய குறியாக்க விவரத்தையும் (encryption )' பெற அதிகாரிகளை அனுமதிக்கிறது. இந்தச் சொல் இரகசிய குறியாக்கப்பட்ட தகவல் தொடர்புகளை குற்றமாக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளதுடன் அந்த திறவுகோல்களை 'இரகசியத் தகவல்' என அதிகாரிகள் கருத வழிவகுக்கிறது.

சமூக ஊடக விமர்சனங்களை அடக்க அரசாங்கம் ஏற்கனவே விக்ரமசிங்க அரசாங்கத்தின் நிகழ்நிலை பாதுகாப்பு மசோதாவைப் பயன்படுத்தி வருகின்றமை, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதற்கு முன்னோட்டமாக அமைகிறது.

தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை நீதித்துறை நடவடிக்கைகளில் சான்றாகப் பயன்படுத்தப்படலாம். இலங்கைக் பொலிஸ் இத்தகைய 'ஒப்புதல் வாக்குமூலங்களை' சித்திரவதை மூலம் பெற்றுக்கொள்வதில் பெயர்போனதாகும். தற்போதைய வரைவு மசோதா, பொலிஸ் அதிகாரிகள் ஒரு சந்தேக நபரை வாக்குமூலம் அல்லது “ஒப்புதல் வாக்குமூலம்” அளிக்க ஒரு நீதவான் முன் கொண்டு வரலாம் என்று முன்மொழிகிறது. இந்தத் திருத்தம், குற்றத்தைச் சுமத்தும் அறிக்கைகளைப் பெறுவதற்காக சந்தேக நபர்களை நிர்ப்பந்திக்கும் பொலிசின் செயலைத் தடுக்க எதுவும் செய்யாது.

பிரிவு 64 இன்படி, ஒரு நபர் 'குற்றம் செய்யத் தயாராகி வருகிறார்' என்றும், அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்காமல் அந்த நடத்தை குறித்து விசாரிக்க முடியாது என்றும் கூற 'நியாயமான காரணங்கள்' இருந்தால், ஒரு உப பொலிஸ் மா அதிபருக்கு 'கட்டுப்பாட்டு உத்தரவுகளை' விதிக்க முடியும்.

இந்தக் கட்டுப்பாடுகளில், ஒருவரின் வசிப்பிடத்திற்கு வெளியே நடமாடுவதற்கு வரம்பிடுதல்; மற்றும் இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ பயணம் செய்தலை கட்டுப்படுத்தல்; வசிப்பிடம் மற்றும் வேலைக்கு இடையேயான வழக்கமான பயணப் பாதைகளிலிருந்து விலகுவதை தடுத்தல்; மற்றும் குறிப்பிட்ட நபர்களுடன் தொடர்பு கொள்வது அல்லது சேர்ந்து செயல்படுவதை கட்டுப்படுத்தல் ஆகியவை உள்ளடங்கலாம்.

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை உட்பட பல்வேறு குற்றங்களுக்காக கடுமையான தண்டனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தூண்டுதல் மற்றும் உடந்தை உட்பட மற்ற குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 20 மில்லியன் ரூபாய்கள் வரை அபராதம், அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 15 மில்லியன் ரூபாய்கள் வரை அபராதம் ஆகிய தண்டனைகள் விதிக்கப்படும்.

ஒரு நபரை ஒரு வருடத்திற்கு விளக்கமறியலில் வைக்கலாம் மற்றும் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கையின் பேரில், ஒரு நீதவானின் ஒப்புதலுடன் மேலும் ஒரு வருடத்திற்கு தடுத்து வைக்கலாம். பொலிஸ் மா அதிபரின் பரிந்துரையின் பேரில், தடுத்து வைக்கும் இடத்தை ஜனாதிபதி தீர்மானிக்கலாம். தடுத்து வைக்கும் இடத்தைப் பற்றி நீதித்துறை மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு நிபந்தனை, இந்த பயங்கரவாதச் சட்டங்களின் கடுமையைக் குறைப்பதற்கு எதுவும் செய்யாது.

சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பு தீவிரமடைந்துள்ள நிலைமையிலும் ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியிலுமே இந்த பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. திசாநாயக அரசாங்கமும் ஆளும் வர்க்கங்களும், ஜனநாயக வடிவங்கள் மூலம் தங்களால் தொடர்ந்து ஆள முடியாது என்பதை முழுமையாக அறிந்திருக்கின்றன.

ஆழமடைந்து வரும் உலக நெருக்கடியின் பின்னணியில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் பாசிச மற்றும் இராணுவமயமாக்கப்பட்ட ஆட்சி முறைகளை நோக்கித் திரும்புகின்றன. அமெரிக்காவில், டிரம்ப் நிர்வாகம் பாசிச ஆட்சியை உறுதிப்படுத்த முயல்கின்ற அதேநேரம் ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உட்பட பிற நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கையாளுகின்றன.

இலங்கையில் 2022ல் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் வெடித்த அரசியல் நெருக்கடியினால் இடம்பெற்ற மாபெரும் வெகுஜன எழுச்சியில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் அதே அரசியல் நெருக்கடி தொடர்கிறது. நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின் பேரழிவுகரமான தாக்கம் பொருளாதாரப் பேரழிவை மேலும் ஆழமாக்கியுள்ளது.

இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள், இராஜபக்ஷவை பதவியிலிருந்து அகற்றிய மக்கள் போராட்டங்களாலும், விக்கிரமசிங்கவின் நிர்வாகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பாலும் அச்சமடைந்து, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக் கோரிக்கைகளைத் திணிப்பதற்கும், வெகுஜன எதிர்ப்பை ஒடுக்குவதற்குமான ஒரு கருவியாக ஜே.வி.பி./தே.ம.ச.யின் தேர்தல் வெற்றியை ஆதரித்தன.

கடந்த ஆண்டில், காசாவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் வடக்கில் உள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து செய்தி வெளியிட்ட ஒரு தமிழ் பத்திரிகையாளருக்கும் எதிராக ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அது 16 பேரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்து, பின்னர் அவர்களை பிணையில் விடுவித்துள்ளது.

ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், போராட்டத்தில் ஈடுபட்ட மின்சாரத் தொழிலாளர்களை அடக்க அத்தியாவசிய சேவைகள் உத்தரவுகளைப் பயன்படுத்தியுள்ளதுடன், தபால் ஊழியர்கள் மற்றும் மாணவர் போராட்டங்களுக்கு எதிராக இராணுவ மற்றும் பொலிஸ் அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான தனது போரைத் தீவிரப்படுத்த அரசாங்கம் செய்யும் தயாரிப்புகளுக்கு முன்னோட்டமாக அமைகிறது என்று நாங்கள் எச்சரிக்கிறோம்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட மசோதாவிற்கு வரம்புக்குட்பட்ட விமர்சனங்களை முன்வைத்தது. இருப்பினும் இறுதியில், விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பெரும்பான்மையாகப் பிரிந்து வந்த ஐ.ம.ச. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முழு ஆதரவளித்தது. தொழிற்சங்கங்கள் புதிய சட்டங்கள் குறித்து ஒரு துரோகமான மௌனத்தை கடைப்பிடிக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ஆரம்பத்திலிருந்தே பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்த்து, ஏனைய அனைத்து அடக்குமுறைச் சட்டங்களுடன் அதையும் நீக்கக் கோரிய அதேநேரம், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான போராட்டத்தில் ஒன்றிணைக்கப் போராடின.

சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டமும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் வர்க்கம் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக அணிதிரள்வதற்கு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதற்கு ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும் சுற்றுப்புறத்திலும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து விலகி, சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் அரச அடக்குமுறைகளுக்கும் எதிரான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டவும், இந்த நடவடிக்கை குழுக்களிலிருந்து ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டிற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

பின்வரும் கோரிக்கைகளுக்காக நடவடிக்கை குழுக்கள் போராட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்:

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் வேண்டாம்! பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ரத்து செய்!

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து இராணுவத்தை திரும்பப் பெறு!

இந்தக் கோரிக்கைகளுக்காகவும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காகவும் முன்னெடுக்கும் போராட்டத்தை ஆளும் வர்க்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் வெல்ல முடியாது, மாறாக சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்துடன் அது பிணைக்கப்பட்டுள்ளது.

Loading