முன்னோக்கு

அமெரிக்காவின் ஹிட்லரும் ஆளும் வர்க்கத்தின் ஒழுக்கநெறியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த புதன்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையில் இருந்து பெறப்பட வேண்டிய தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி ஒரு அரசியல் குற்றவாளி என்பதாகும். ஏகாதிபத்திய புவிசார் அரசியலில் கூட, முதலாளித்துவ பெரும் வல்லரசு நலன்களைப் பின்தொடரும் பொதுவான தீய நோக்கங்களுக்கும், பாசிச மிருகத்தனத்திற்கும் இடையே ஒரு ஒழுக்கநெறி எல்லை இருப்பதாக ஒருவர் ஒப்புக்கொண்டால், அமெரிக்க அரசாங்கத்தின் தலைவர்கள் அந்த எல்லையைத் தாண்டிவிட்டார்கள். ட்ரம்ப், வான்ஸ், ஹெக்செத், ரூபியோ மற்றும் மில்லர் ஆகியோரின் பெயர்கள் மூன்றாம் பேரரசில் (ஹிட்லரின் ஆட்சி) இருந்த நாஜிக்களின் தலைவர்களான ஹிட்லர், கோரிங், ஹிம்லர், வான் ரிபென்ட்ராப் மற்றும் கோயபல்ஸ் ஆகியோருடன் இணைந்து நித்திய அவப்பெயருடன் நிலைத்து நிற்கும். ஆகவே, வரலாற்றின் தீர்ப்பு இரக்கமற்றதாக இருக்கும்.

ஆனால், அந்தத் தீர்ப்பு தனிநபர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், அவர்களை அதிகாரத்திற்கு உயர்த்திய சமூக வர்க்கத்திற்கு எதிராகவும், ஈரான் மக்களுக்கு எதிராக அவர்கள் இழைத்த கொடூரமான குற்றங்களை யாருடைய நலனுக்காக செய்தார்களோ அந்த வர்க்கத்திற்கு எதிராகவும் இன்னும் ஆழமாக வழங்கப்படும். இதில்தான் ட்ரம்பின் புதன்கிழமை இரவு ஆவேசப் பேச்சின் முக்கியத்துவம் அடங்கியுள்ளது. இது, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மீளமுடியாத அரசியல் மற்றும் அழுகிப்போன ஒழுக்கநெறியை அம்பலப்படுத்தியுள்ளது.

குற்றங்களைச் செய்த முதல் ஜனாதிபதி ட்ரம்ப் அல்ல. அவருக்கு முன் இருந்தவர்கள் நாடுகளின் மீதான ஆக்கிரமிப்புகள், அரசாங்கங்களைக் கவிழ்ப்பது மற்றும் அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட தனிநபர்களை சித்திரவதை செய்வது மற்றும் படுகொலை செய்வது போன்றவற்றுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், முந்தைய நிர்வாகங்கள் தங்களின் செயல்களுக்கு, அவை எவ்வளவுதான் தேய்ந்துபோனதாக, வஞ்சகமானதாக, ஏமாற்றுத்தனமானதாக மற்றும் கபடநாடகமாக இருந்தபோதிலும், ஏதோ ஒரு சட்டப்பூர்வ மற்றும் ஜனநாயக ரீதியிலான நியாயத்தை வழங்க முயன்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டங்கள் மீதான அவமதிப்பை —இதனுடன் சேர்த்து, ஜனநாயகக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதை நிராகரிப்பதை— அரசு கொள்கைகளின் அடிப்படைகளாக, பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த குற்றச் செயல்கள் அம்பலமானபோது, அவை சட்ட விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்துவதில் இருந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விலகல்கள் எனக் கூறி, உத்தியோகபூர்வ வருத்த வெளிப்பாடுகளுடன் மன்னிக்கப்பட்டன.

அந்தக் கட்டம் கடந்துவிட்டது. ட்ரம்ப்பின் உரை, அதன் மறைப்பு இல்லாத தன்மையால் குறிப்பிடத்தக்கதாக இருந்தது அமெரிக்க நடவடிக்கைகளின் திட்டமிட்ட இனப்படுகொலை நோக்கங்களை எவ்விதப் பூச்சுமின்றி அப்பட்டமாக வெளிப்படுத்தும் வார்த்தைகளை அவர் தேர்ந்தெடுத்தார். “அவர்களை நாம் கற்காலத்திற்கே கொண்டு செல்லப் போகிறோம், அதுதான் அவர்களுக்குச் சொந்தமான இடம்,” என்று அவர் அறிவித்தார். அமெரிக்கா ஈரானின் “ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையங்களையும் மிகக் கடுமையாகவும், அநேகமாக ஒரே நேரத்திலும்” தாக்கும் என்று அவர் அச்சுறுத்தினார். ஈரானின் தலைவர்களைக் கொன்றொழித்தது குறித்து “அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள்” என்று தற்பெருமை பேசிய அவர், ஒரு மாஃபியா தலைவனின் கர்வத்துடன், “அனைத்துச் சீட்டுகளும் (அதிகாரம்) நம்மிடம் உள்ளன. அவர்களிடம் எதுவுமில்லை,” என்று சேர்த்துக் கொண்டார்.

ஈரானின் எண்ணெய் வளத் துறை இதுவரை சேதப்படுத்தப்படாமல் இருந்ததற்கு, அதன் அழிவு அவர்களுக்கு “பிழைப்பதற்கோ அல்லது மீண்டும் கட்டியெழுப்புவதற்கோ ஒரு சிறிய வாய்ப்பைக் கூட வழங்காது” என்பதுதான் காரணம் என்று விளக்கிய ட்ரம்ப், ஒட்டுமொத்த நாட்டின் சமூக வாழ்வின் பொருள்சார் அடித்தளங்களையே அழித்தொழிக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

இந்தக் கருத்துக்களில் வெளிப்பட்டது வெறும் ஒரு தனிநபரின் விகாரமான மனநிலையில் மட்டுமல்ல, மாறாக குற்றச்செயல்களுக்குப் பழக்கப்பட்டுப்போன மற்றும் அதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகின்ற ஒரு சமூக அடுக்கின் அத்தியாவசியத் தன்மையிலும் உள்ளது.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து கடந்த 35 ஆண்டுகளாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தவொரு தண்டனையிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்ற உணர்வுடன் வெளியுறவுக் கொள்கையை நடத்தி வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் சோசலிசப் புரட்சியிலிருந்து உருவானதும், மூன்றாம் பேரரசைத் தோற்கடிப்பதில் தீர்க்கமான பங்கைக் கொண்டதுமான சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை நடத்துவதில் ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாட்டை விதித்திருந்தது. ஆனால், ஸ்டாலினிச ஆட்சியால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதானது, அந்தத் தடைகள் அனைத்தையும் நீக்குவதுக்கு வழி வகுத்தது. வன்முறையைப் பயன்படுத்துவது, முதலாளித்துவ அமைப்புமுறையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கையில் ஆளும் வர்க்கம் வசீகரிக்கப்பட்டது. பாலைவனப் புயல் நடவடிக்கைக்குப் பிறகு வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பிரகடனப்படுத்தியதைப் போல: “வன்முறை வேலை செய்கிறது.”

ட்ரம்ப்பின் உரைக்கான பாதை 1991 இல் ஈராக் மீதான ஆரம்பக்கட்ட ஆக்கிரமிப்பு மற்றும் 1999 இல் சேர்பியா மீதான குண்டுவீச்சு வழியாகச் செல்கிறது. இது, 2001ல் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் 2003ல் ஈராக் மீதான தாக்குதலின் தொடர்ச்சியாக, அபு கிரைப் மற்றும் சி.ஐ.ஏ-வின் இரகசிய சித்திரவதை மையங்களில் அம்பலமான சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்களின் பரந்த இயந்திரத்தின் வழியாகவும், நீருக்குள் அமுக்கி மூச்சுத்திணறச் செய்தல், மற்றும் வக்கிரமான சித்திரவதைகளுக்கு ஒரு அதிகாரத்துவ மரியாதையை வழங்க உருவாக்கப்பட்ட “மேம்படுத்தப்பட்ட விசாரணை” என்ற முழு சொற்களஞ்சியத்தின் வழியாகவும் தொடர்ந்தது.

மேலும், இது 2011 லிபியா மீதான குண்டுவீச்சு வழியாகவும் செல்கிறது. அங்கு ஒரு நாட்டின் அழிவும், கடாபியின் பகிரங்க அவமதிப்பும் படுகொலையும் வாஷிங்டனில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனால், “நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்தார்” என்ற நடுக்கமூட்டும் கர்வத்துடன் வரவேற்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது காஸா வழியாகச் செல்கிறது. அங்கு இனப்படுகொலை என்பது ஒரு கொள்கையாகவும், பட்டினி என்பது ஒரு மூலோபாயமாவும், மருத்துவமனைகள் மற்றும் அகதி முகாம்களை அழிப்பது என்பது போரின் அங்கீகரிக்கப்பட்ட கருவியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

காசா ஒரு புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தின் மிக முக்கியமான அரசியல் உண்மைகளில் இதுவும் ஒன்று. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவின் முழு ஆதரவோடும், அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் உடந்தையோடும் ஒரு முழுமையான மக்கள் இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். முழு குடும்பங்களும் துடைத்தெறியப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கானவர்களை அதிர்ச்சியடையச் செய்யும் வகையிலான ஒரு குரூரத்துடன் பொதுமக்களின் வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் சகித்துக்கொள்ள முடியாதவை என்பது ஆளும் வர்க்க வட்டாரங்கள் கற்றுக்கொண்ட பாடம் அல்ல. மாறாக, அவை அனுமதிக்கப்பட வேண்டியவை என்பதே அவர்கள் கற்றுக்கொண்ட பாடமாகும்.

பழைய கட்டுப்பாடுகள் இனி செல்லாது என்றும், எவ்வளவு கொடூரமான செயலாக இருந்தாலும், அது போதுமான பலத்துடன் நடத்தப்பட்டு, போதுமான அளவு வெட்கமற்ற பிரச்சார இயந்திரத்தால் ஆதரிக்கப்பட்டால், அதை இயல்பானதாக மாற்ற முடியும் என்றும் வாஷிங்டன், லண்டன், பேர்லின் மற்றும் பாரிஸில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப்பின் உரை, இந்த புதிய அரசியல் சூழலுக்கு உரியது. இது பகல் வெளிச்சத்திலேயே கூச்சமின்றி பாரிய படுகொலைகளை நடத்த முடியும் என்பதை காஸாவிலிருந்து கற்றுக்கொண்ட ஒரு ஆளும் வர்க்கத்தின் மொழியாக உள்ளது.

ஈரான் மீதான இந்தத் தாக்குதல், இந்த புதிய விதிமுறைக்கு அதன் முழுமையான மற்றும் மிகவும் பயங்கரமான வடிவத்தைக் கொடுத்துள்ளது. முதலில் 25 இலட்சம் மக்கள் வசிக்கும் ஒரு சிறிய பகுதியில் (காஸா) பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், இப்போது 9 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு பரந்த நாட்டின் மீது பயன்படுத்தப்படுகின்றன. பிப்ரவரி 28, 2026 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் 12 மணி நேரத்திற்குள் ஈரான் மீது சுமார் 900 தாக்குதல்களைத் தொடுத்தன. அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே இந்தத் தாக்குதல்களை நடத்தியது. இது, இராஜதந்திரம் என்ற கருத்தையே கேலி செய்யும் ஒரு திட்டமிட்ட வஞ்சகச் செயலாகும். ஆரம்பகட்டத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டார், மூத்த இராணுவ மற்றும் அரசியல் தலைமை அழிக்கப்பட்டது, மேலும் ஈரானின் 31 மாகாணங்களில் குறைந்தது 26 மாகாணங்களில் உள்ள இலக்குகள் தாக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஒரு தொடர்ச்சியான அழிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது: முதல் ஒரு மாதத்திற்குள் 11,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன, 300-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் சேதப்படுத்தப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன, பல்லாயிரக்கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள் இடிபாடுகளாக மாற்றப்பட்டன, பள்ளிகள் தரைமட்டமாக்கப்பட்டன, கலாச்சார பாரம்பரிய இடங்கள் சிதைக்கப்பட்டன, கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் தகர்க்கப்பட்டன மற்றும் ஒரு அணுமின் நிலையம் மீண்டும் மீண்டும் குண்டுவீசித் தாக்கப்பட்டது.

இந்தப் போரின் மிகவும் பயங்கரமான ஒரு அட்டூழியம் —மினாப்பில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி அழிக்கப்பட்டதாகும். இதில் 170-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்— வருத்தத்துடன் எதிர்கொள்ளப்படவில்லை, மாறாக அலட்சியத்துடன் எதிர்கொள்ளப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு “கடும் சினம்” என்று பெயரிடப்பட்டது. இது காட்டுமிராண்டித்தனத்தைக் கொண்டாடுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயராகும்.

பல தசாப்தங்களாக, போல்ஷிவிக்குகளின் நடத்தையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக லியோன் ட்ரொட்ஸ்கியின் நடத்தையிலும், மார்க்சிய “அறநெறியற்ற தன்மையின்” தீய சாராம்சம் என்று கருதப்படும் சான்றுகளைக் கண்டறிவதையே பிரதான வரலாற்றுத் தொழிலாகக் கொண்ட குட்டி முதலாளித்துவப் பத்திரிகையாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒழுக்கநெறிச் சொற்பொழிவுகளுக்கு ஒருவர் ஆளாகி வருகிறார். புரட்சிகர வன்முறைக்கு எதிரான கண்டனங்கள், “சர்வாதிகாரத் தூண்டுதல்” குறித்த தியானங்கள் மற்றும் மார்க்சிஸ்டுகள் ஒழுக்கநெறி கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்பது குறித்த போலித்தனமான கருத்துக்களால் அவர்கள் நூலகங்களை நிரப்பியுள்ளனர்.

நவீன யுகத்தின் மையமான ஒழுக்கநெறி பிரச்சினை, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய முயன்றவர்களின் பிடிவாதத்தில்தான் உள்ளது என்று நம்புமாறு மாணவர்களும் தொழிலாளர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், இதே கூட்டத்தினர் ஏகாதிபத்தியத்தின் உண்மையான காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ளும்போது, வியக்கத்தக்க சகிப்புத்தன்மையைக் காட்டுகிறார்கள். அவர்களின் திட்டவட்டமான கண்டனங்கள் நுணுக்கமான விளக்கங்களாக கரைந்து போகின்றன. அவர்களின் ஒழுக்கநெறியின் ஆவேசம் குறைகிறது, மேலும் வன்முறை மீதான அவர்களின் எதிர்ப்பு மிகவும் நுணுக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றாக மாறுகிறது. 1917 ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும், அதைக் குறித்து முடிவில்லாத ஒழுக்கநெறி ஆத்திரத்தை அவர்களால் வெளிப்படுத்த முடிகிறது. ஆனால், அமெரிக்கா ஒரு சமூகத்தையே எரித்துச் சாம்பலாக்கும்போதும், இஸ்ரேல் குழந்தைகளை இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கும்போதும், சித்திரவதைகள் முறைப்படுத்தப்படும்போதும், அமெரிக்கத் தெருக்களில் ஏழைகளையும் உடைமையற்றவர்களையும் பொலிஸ் சுட்டுக்கொல்லும்போதும் அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். ஒழுக்கநெறியின் பின்னால் உள்ள வர்க்க உள்ளடக்கம் இங்கே அசாதாரணமான தெளிவுடன் வெளிப்படுகிறது

ஒழுக்கநெறி என்பது, பொருள்சார் நலன்களையும் சமூக நிலையையும் பொருட்படுத்தாமல், அனைத்து வர்க்கங்களையும் சமமாகக் கட்டுப்படுத்தும், சமூகத்திற்கு மேலாக மிதக்கும் ஒரு நித்தியக் கட்டளை அல்ல என்று மார்க்சியம் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. ஒழுக்கநெறிக்கு ஒரு வரலாறு உண்டு. அதற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. ஆளும் வர்க்கமும், அவர்களுக்குத் துணை நிற்கும் அறிவுஜீவிகளும், சுரண்டல், போர் மற்றும் அடக்குமுறையினால் நிலைநிறுத்தப்படும் ஒரு சமூக-பொருளாதார அமைப்பு முறையை பாதுகாக்கும் அதே வேளையில், உலகளாவிய கோட்பாடுகள் மற்றும் “விதிமுறைகள் சார்ந்த ஒழுங்கு” பற்றி இடைவிடாது பேசுகிறார்கள். இப்போது உலகின் கண்களுக்கு முன்னால் விரிந்து கொண்டிருப்பது, அதன் ஜனநாயக அலங்காரங்கள் நீக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் உண்மையான ஒழுக்கநெறியாகும்.

18-ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜனநாயகப் புரட்சிகளின் காலத்தில், முதலாளித்துவ அறிவொளி இயக்கமானது, தனது ஒழுக்கநெறியை காண்ட் (Kant) முன்வைத்த இரண்டாவது வகைப்பாட்டு கட்டளையின் அடிப்படையில் அமைத்தது: “எனவே, உன்னிடத்திலோ அல்லது மற்றவரிடத்திலோ இருக்கும் மனிதநேயத்தை, ஒருபோதும் வெறும் கருவியாகக் கருதாமல், எப்போதும் ஒரு இலக்காகவே கருதும் வகையில் செயல்படு” என்று காண்ட் கூறுகிறார்.

ட்ரம்ப்பியன் பாசிசத்தை உண்மையான உணர்வில் மாற்றி அமைத்தால், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை வழிநடத்தும் ஒழுக்கநெறி கோட்பாடு இதுதான்: “அமெரிக்க வல்லமையைப் பிரயோகிப்பதில் மனித உயிர்கள், ஒட்டுமொத்த இனங்கள் மற்றும் நாகரிகத்தையே கூட தூக்கியெறியக்கூடிய சொத்துக்களாகக் கருதி, தன்னலக்குழுவின் அதிகாரம் மற்றும் இலாபத்தை அதிகப்படுத்துவதற்காக எப்போதும் செயல்படு” என்பதாகும்.

நிதி சார்ந்து கொள்ளையடித்தல் மற்றும் சமூகச் சீரழிவின் மீது தனது செல்வத்தைக் கட்டமைத்துள்ள ஒரு வர்க்கத்தின் ஒழுக்கநெறி இதுவாகும். ஒட்டுமொத்த மக்களையும் தங்களின் அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கான ஒரு மூலப்பொருளாக மட்டுமே கருதி, மிகுந்த இரக்கமற்ற தன்மையுடன் செயல்படும் அரசியல் தலைவர்களின் ஒழுக்கநெறி இது.

வெளிநாடுகளில் மக்களைக் கொடுமைப்படுத்தும் ஒரு அரசாங்கம், உள்நாட்டிலும் அதே முறைகளையே கையாளும். ஏகாதிபத்தியப் போர்களில் உருவாக்கப்பட்டுவரும் வழிமுறைகள், உள்நாட்டு வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன. மத்தியிலுள்ள பெடரல் அரசின் முகவர்களால் கொல்லப்பட்ட ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் ப்ரெட்டி ஆகியோரின் மரணங்கள், ஈரான் படையெடுப்பிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நிலவி வரும் அரசு வன்முறையின் ஒரு பரந்த வடிவத்தைச் சார்ந்தவை: பெருகிவரும் போலீஸ் கொலைகள், உள்ளூர் பொலிஸ் துறைகளின் இராணுவமயமாக்கல், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கக் குடியிருப்புகளையும் உள்நாட்டுப் பாதுகாப்பு மண்டலங்களாக மாற்றுவது, மற்றும் ஏழைகளின் உயிர்கள் தூக்கியெறியப்பட வேண்டியவை என்ற வழக்கமான அனுமானம் ஆகியவை இதில் அடங்கும். அமெரிக்க அரசின் வன்முறையானது வெளிநாடு மற்றும் உள்நாடு எனத் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்படவில்லை. அவை இரண்டும் ஒரே மூலத்திலிருந்துதான் உருவாகின்றன. மோசடி, திருட்டு, ஊக வணிகம் மற்றும் போர் ஆகியவற்றின் மூலம் தனது செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு ஆளும் வர்க்கம், அரசியலமைப்பு நெறிமுறைகள் தடையாக மாறும்போது சட்டவிரோத அடக்குமுறையின் மூலம் ஆட்சி செய்கிறது.

அரசியல் வாழ்வில் சீரழிவு என்பது அமெரிக்க சமூகத்தின் தன்னலக்குழு கட்டமைப்பிலிருந்து பிரிக்க முடியாதது. செல்வக் குவிப்பு ஒருபுறம் உச்சத்தில் இருக்கும்போது, அதற்கு இணையான அதிகாரக் குவிப்பு மறுபுறம் இல்லாமல் இருக்க முடியாது. சமூகத்தின் எஞ்சிய பகுதிக்கு மேலாக ஒரு சிறிய நிதிப் பிரபுத்துவத்தின் ஆட்சி நிலவுவது, ஒவ்வொரு ஜனநாயக நிறுவனத்தையும் அரித்து அழித்துவிடுகிறது. நீதிமன்றங்கள், நாடாளுமன்றங்கள், ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், பொலிஸ்துறை, உளவுத்துறை இயந்திரம், அரசாங்கக் கட்சிகள் என அனைத்தும் ஒரு ஒட்டுண்ணி உயரடுக்கு தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் கருவிகளாக மாற்றியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், குற்றவியல் வன்முறைகள் தவிர்க்க முடியாதவை. பில்லியனர்கள், பெருநிறுவன கொள்ளையர்கள், இராணுவ-உளவுத்துறை செயல்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் மோசடி செய்பவர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு சமூகம், அதை ஆதிக்கம் செலுத்துபவர்களின் குணாதிசயத்தையே பெறுகிறது. இத்தகைய சமூகத்தை குற்றவாளிகளால் ஆளப்படும் சமூகம் என்று விவரிப்பது ஒரு அரசியல் உண்மையாகும்.

ஆயினும்கூட, இந்தச் சீரழிவுச் செயல்முறை அதன் எதிரிடையை உருவாக்காமல் நகர்வதில்லை. ஆளும் வர்க்கம் ஒழுக்கநெறி சிதைவின் பாதையில் வெகுதூரம் சென்றுவிட்டது, ஆனால், மக்கள் தொகையின் பரந்த பிரிவினர் அதே இலக்கை நோக்கி அவர்களைப் பின்தொடரவில்லை. அமெரிக்கா 250 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புரட்சியின் மூலம் நிறுவப்பட்டது; அது கொடுங்கோல் காலனித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து, மனிதர்களின் சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தியது. அதன் இருப்பு அடிமைமுறையை ஒழித்த ஒரு உள்நாட்டுப் போரினால் நிலைநிறுத்தப்பட்டது.

ஜெபர்சன் மற்றும் லிங்கன் ஆகியோரின் வார்த்தைகள் இன்றும் அமெரிக்க மக்களின் கூட்டு நனவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயக உந்துதல்கள், நீதி உணர்வு, கொடுமைக்கு எதிரான இயல்பான வெறுப்பு, பொய்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனம் மீதான பகைமை ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த உணர்வுகள் வர்க்கப் போராட்டத்தின் தீவிரத்தால் தூண்டப்பட்டு வலுவடைந்து வருகின்றன. முதலாளித்துவ தன்னலக்குழுவின் குற்றத்தன்மைக்கும் மக்களின் ஒழுக்கநெறி உணர்வுக்கும் இடையிலான மோதல் பெருகிய முறையில் வெடிக்கும் தன்மையைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு தற்பெருமையான அச்சுறுத்தலும், அரசின் ஒவ்வொரு வன்முறைச் செயலும், அழிவை பகிரங்கமாகப் போற்றும் ஒவ்வொரு நிகழ்வும், ஆளும் தட்டுக்கும் அவர்கள் ஆளும் உரிமை கோரும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அதிகப்படுத்துகிறது.

ட்ரம்பின் கொடுமைகளை மீறி, ஈரான் மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பணிய மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பார்கள். ஈரான் மக்களுக்குப் பாதுகாப்பாக நிற்பது அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும். ஈரான் மீதான குண்டுவீச்சை நிறுத்தவும், இந்தச் சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் தொழிலாள வர்க்கத்தின் ஆற்றல் திரட்டப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் இந்தப் போரிலிருந்து அவசியமான முடிவுகளை எடுக்க வேண்டும். அதிர்ச்சியடைவது மட்டும் போதாது. திகில் உணர்வு, அது பாட்டுக்கு விடப்பட்டால், பயனற்ற விரக்தியிலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர் எதிர்ப்புச் சம்பவங்களிலோ முடிந்துவிடும். தேவையானது என்னவென்றால், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்படும், உண்மையான புரட்சிகர ஒழுக்கநெறியால் ஊக்கப்பட்ட, மற்றும் ஆளும் வர்க்கத்தின் சீரழிவுக்கு அனைத்து வகையிலும் எதிரான ஒரு பாரிய தொழிலாள வர்க்க சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியாகும்.

இத்தகைய ஒழுக்கநெறிக்கும், பண்டிதர்களின் வெற்றுப் போதனைகளுக்கும் அல்லது பாசாங்குத்தனமான தாராளமயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்திரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலிருந்து எழுகிறது. இது வர்க்க ஒருமைப்பாடு, உண்மைத்தன்மை, ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, கொடுமை மற்றும் மேலாதிக்கத்திற்கு எதிரான சமரசமற்ற பகைமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு வெளிப்படையான வர்க்கப் போராட்டத்தின் ஒழுக்கநெறியாகும். இலாபம் மற்றும் அதிகாரத்தின் சேவையில் மனிதர்களைத் தூக்கியெறியக்கூடிய பொருட்களாக நடத்த முடியாது என்ற நம்பிக்கையில் இது உருவானது. இதற்குள் நாகரிகத்தின் உயர்ந்த கோட்பாடுகளும் மனிதகுலத்தின் ஆழமான அபிலாஷைகளும் அடங்கியுள்ளன.

மார்க்சிசத்திற்கு எதிரான பழைய அவதூறுகளுக்கு இதுதான் பதிலாகும். உண்மையான “ஒழுக்கமற்றவர்கள்” புரட்சிகர சோசலிஸ்டுகள் அல்ல, மாறாக இனப்படுகொலைக்கு ஆயுதமும், நிதியும் வழங்கும் ஆளும் வர்க்கங்களும் அவர்களின் கூட்டாளிகளுமே ஆவர். அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் சர்வதேசக் கூட்டாளிகளின் குற்றத்தன்மை உலகின் கண்களுக்கு முன்னால் அம்பலப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தன்மைக்கு எதிராக உயரிய சமூகக் கொள்கையாலும், உயரிய ஒழுக்கநெறிக் கருத்தாலும் வழிநடத்தப்படும் ஒரு சக்தி அணிதிரட்டப்பட வேண்டும். அந்த சக்திதான் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். சோசலிசத்திற்கான அதன் போராட்டம் அரசியல் ரீதியாக அவசியமானது மட்டுமல்ல. நவீன நாகரிகத்தில் மனிதாபிமானமிக்க, கண்ணியமான மற்றும் விடுதலை அளிக்கக்கூடிய அனைத்தினதும் இன்றியமையாத வெளிப்பாடாகும். மனிதகுலத்தின் உயிர்வாழ்வு அதன் வெற்றியில்தான் தங்கியுள்ளது.

Loading